தமிழின் வட்டார வழக்குகள்

சென்னை, மதுரை, கோவை, நெல்லை என்று பிரபலமான தமிழ் வட்டார வழக்குகளையும், கூடவே தமிழோடு இரண்டறக் கலந்துவிட்ட பிற வட்டார வழக்குகளையும் பற்றிய பதிவு.

ஒருவர் பேசும் தமிழை வைத்தே அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடித்திருக்கிறீர்களா? பல்வேறு சொந்த வட்டார வழக்குகளையும், அண்டை மொழிகள் கலந்த பேச்சு நடைகளையும் கொண்ட சுவாரசியமான மொழி தமிழ். தமிழகம் முழுவதும் ஒரு பயணம் போனால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மொழி வேறுபடும் அழகைக் கேட்டு ரசிக்கலாம். இவற்றில் மிகவும் பிரபலமான வட்டார வழக்குகள் நெல்லை, மதுரை, கோவை மற்றும் சென்னைத் தமிழ்களே. இவற்றைப் பற்றியும் வேறு சில சுவாரசியமான வட்டார வழக்குகளையும் பற்றி இங்கே பார்ப்போம்.

சென்னைத் தமிழ்:-

தமிழகத்தின் தற்போதைய தலைநகரமான சென்னையே முந்தைய மெட்ராஸ் மாகாணத்தின் தலைநகரமாகவும் இருந்தது. அதன் விளைவாக, நிர்வாகமும் வணிகமும் மையம் கொண்டிருந்த இடமாகச் சென்னை திகழ்ந்தது. பதவிக்காகவும், தொழிலுக்காகவும் பல ஆங்கிலேயர்களும், வட இந்தியர்களும் சென்னைக்குக் குடிபெயர்ந்து வர வேண்டி இருந்தது. இப்படியாகப் பல பகுதிகளில் இருந்து வந்த மக்களின் மொழிகள் கலந்து கிடைத்த கூட்டாஞ்சோறான சென்னைத் தமிழ் இன்றும் உழைக்கும் வர்க்கத்தின் மொழியாகச் சென்னையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலம், இந்தி, உருது என்று பல மொழிகளும் தாராளமாகச் சென்னைத் தமிழுக்குச் சொற்களை வழங்கியுள்ளன.

கொங்குத் தமிழ்:-

கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட கொங்கு நாடு கேட்கவே சங்கீதமாகத் தோன்றும் அழகான தமிழை உடையது. இந்த வட்டார வழக்குக்கே உண்டான ஒரு தனிச்சிறப்பு இந்த மொழியின் மரியாதை. இந்தத் தமிழைப் பேசும்போது மரியாதை கூடுவது போன்ற உணர்வு வருவது இயற்கையே. மரியாதை ஒரு புறம் இருந்தாலும், இந்தப் பகுதிக்கே உண்டான குசும்பும், நகைச்சுவை உணர்வும் கூட மிகவும் பிரபலமானது தான். அந்தக் கிண்டலும் இந்த மொழியில் நிறைந்திருக்கும் வெகு சுவாரசியமான தமிழ் இது.

மதுரைத் தமிழ்:-

கிராமங்களின் தமிழ் என்றால் இன்றும் நம் மனதில் முதலில் தோன்றுவது மதுரைத் தமிழ் தான். ஒவ்வொரு வாக்கியத்தையும் கொஞ்சம் இழுத்து முடிப்பதும், பேச்சு முழுக்கத் தெறிக்கும் ஒரு மண்வாசனையும் இந்த மொழியின் தனித்துவங்கள். மதுரையும் மதுரையைச் சுற்றி இருக்கும் சிறு நகரங்களும் சேர்ந்தே தமிழ்க் கலாச்சாரத்தின் தலைமையிடமாகப் பலகாலம் திகழ்ந்து வருகின்றன. அப்படி மண்ணின் மணத்தோடு கொஞ்சிப் பேசும் தமிழ்க் கலாச்சாரத்தின் குரலாக மதுரைத் தமிழ் ஒலிக்கிறது.

நெல்லைத் தமிழ்:-

சங்க இலக்கியம் தமிழ் மொழியையே பொதிகை மலையில் பிறந்ததாக உருவகப்படுத்திச் சொல்கிறது. அந்தப் பொதிகை மலையின் தமிழான நெல்லைத் தமிழ் இன்றளவும் மிகத் தனித்துவமானதாகத் திகழ்கிறது. இந்தத் தமிழை வேறு ஊர்க்காரர்கள் கற்றுக்கொண்டு பேசுவது கொஞ்சம் கடினம்தான். பல ஊர்த் தமிழ் வழக்குகளையும் பெரிய திரையில் பேசி அசத்திய உலக நாயகன் கமல்ஹாசன் கூட நெல்லைத் தமிழ் பேசிப் பழகி நடிக்க, பல ஆண்டுகள் கழித்தேதான் வாய்ப்பு கிடைத்தது. இன்றும் ‘எலே மக்கா’ என்ற ஒற்றைச் சொல் உலகம் முழுவதும் பல நெல்லை மக்களை நண்பர்களாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பிரபலமான சொந்த வட்டார வழக்குகளோடு அண்டை மொழிகள் கலந்து தோன்றிய சில வழக்குகளையும் காண்போம்.

பாலக்காட்டுத் தமிழ்:-

தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பாலமே இந்தப் பாலக்காட்டுப் பகுதி. இயல்பாக, தமிழும் மலையாளமும் கலந்த ஒரு மொழியைத் தன் அடையாளமாகக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வட்டார வழக்கு அடைந்திருக்கும் வளர்ச்சி இதை ஒரு தனி மொழியாகவே சில நேரம் நினைக்க வைத்து விடுகிறது. இந்த வட்டார வழக்கின் தனிச்சிறப்பு இதன் சங்கீத ஒலியே ஆகும்.

சௌகார்பேட் தமிழ்:-

இது சென்னையின் மார்வாடித் தமிழ். பொதுவாக, தமிழும் இந்தியும் கலந்த தமிழ் என்று சொல்லலாம். சௌகார்பேட் என்பது சென்னையில் வட இந்தியர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதி என்பதால் இந்தத் தமிழ் இந்தப் பெயரால் குறிப்பிடப் படுகிறது. இந்தி கொஞ்சம் தூக்கலாகவும், தமிழ் கொஞ்சம் தூவி விட்டாற்போலவும் ஒலிக்கும் இந்த வழக்கு காலம்காலமாக இரு கலாச்சாரங்களுக்குப் பாலமாக இருந்து வந்திருக்கிறது.

ஓசூர் தமிழ்:-

தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்குமான எல்லை நகரமான ஓசூர், தமிழையும் கன்னடத்தையும் கலந்து கொஞ்சம் துள்ளலான ஒரு தனித்தமிழை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினியே பேசும் தமிழ் என்பது இந்தத் தமிழின் தனிச்சிறப்பு.

தெலுங்குத் தமிழ்:-

ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு மக்கள் வந்து குடிபெயரும் வழக்கம் எல்லை நகரங்களைத் தாண்டி மையத் தமிழகப் பகுதிகளில் கூட காணப்படுகிறது. தெலுங்கையும் தமிழையும் கலந்து இவர்கள் பேசும் வட்டார வழக்கு, தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த வட்டார வழக்கு ஒரு வரலாற்றுப் போக்கின் சின்னமாகவும் திகழ்கிறது.

இலங்கைத் தமிழ்:-

அண்டை மாநிலங்களின் கலப்புகளை எல்லாம் தாண்டி அண்டை நாட்டில் கலந்தொலிக்கும் தமிழே இலங்கைத் தமிழ். வரலாறு, கலாச்சாரம் போன்ற பல காரணங்களால் தமிழகத்தின் வாழ்வோடும் அரசியலோடும் மிக நெருக்கமான தொடர்பை உடைய தமிழ். உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழர்களில் முக்கியமான ஒரு சதவீதமாக ஒலிக்கும் தமிழ் இந்த இலங்கைத் தமிழ்.

தொகுப்பாளினித் தமிழ்:-

சாட்டிலைட் டிவியின் வரவால் தமிழுக்குக் கிடைத்த புத்தம் புதிய வட்டார வழக்குதான் இது. கொஞ்சம் தூக்கலாகவே ஆங்கிலம் கலந்த தமிழ். பெருநகரங்களில் தமிழை விட ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் மேல்வர்க்கம் இந்தத் தமிழைத் தனதாக்கிக் கொண்டு வருகிறது. தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினிகள் தங்களை ஸ்டைலாகக் காட்டிக் கொள்ளப் பயன்படுத்திய காரணத்தால் இதைத் தொகுப்பாளினித் தமிழ் எனலாம்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *