தென்மேற்குப் பருவமழை – இந்தியாவின் இயற்கை அதிசயம்

இந்திய நிலப்பரப்பில் 90 சதவீதப் பகுதிகளுக்கு மழைப் பொழிவைப் பெற்றுத் தருவது இந்தத் தென்மேற்குப் பருவமழைதான். ஜூன் முதல் செப்டம்பர் வரை இந்தியாவின் அநேகப் பகுதிகளில் மழை பெய்யச் செய்யும் தென்மேற்குப் பருவமழையை இந்தியாவின் கோடைக்காலப் பருவமழை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Written by: Sakthi S

உலகின் வெப்ப மண்டலப் பகுதியில் அமைந்திருக்கும் நாடு இந்தியா. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 6 முதல் 7 மாதங்கள் வரை கடுமையான கோடைக் காலம் நிலவும். மூன்று மாதங்கள் மழைக் காலமும், அதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் குளிர்காலமாகவும் இருக்கும். இதுதான் இந்தியாவின் பருவநிலை.

 

தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை ஆகிய இரண்டும்தான் இந்தியாவில் பெய்யும் மழைக்கு முக்கியக் காரணிகள். இவற்றுள் தென்மேற்குப் பருவமழைதான் இந்தியாவின் பிரதானப் பருவமழை. இந்தப் பருவமழைக் காலத்தில்தான் இந்தியாவின் 90% நிலப்பகுதிகள் மழை பெறுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கும் மூன்று முக்கிய இயற்கை அமைப்புகள்தான் இந்தப் பருவமழையை உண்டாக்குகின்றன. அதில் முதலாவது இந்தியாவின் வடபகுதியில் இருக்கும் இமயமலைத் தொடர், இரண்டாவது வடமேற்குப் பகுதியில், ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கும் தார் பாலைவனம், மூன்றாவது மகாராஷ்டிர மாநிலத்தில் தொடங்கி தமிழ்நாடு வரை கிட்டத்தட்ட 1500 கிமீ நீளமுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள்.

பிப்ரவரி தொடங்கி மே, ஜூன் வரை இந்தியாவின் அநேகப் பகுதிகளில் கோடைக் காலம்தான். அதிலும் குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் மத்திய மற்றும் வட பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை கிட்டத்தட்ட 45 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை நிலவும். தார் பாலைவனம், இமயமலையின் லடாக் மற்றும் திபேத் பகுதிகளில் உண்டாகும் இப்படியான அதீத வெப்பத்தால் வளிமண்டலத்தில் இருக்கும் காற்று சூடாகி மேலே எழும்பும். மேலே செல்லும் காற்றால் வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் பெரும் வெற்றிடம் உருவாகும். இந்த வெற்றிடம் இந்தியப் பெருங்கடலிலிருந்து குளிர்ந்த மழை மேகங்களை இந்திய நிலப்பகுதிக்குள் இழுத்து பெரும் மழையைப் பொழியச் செய்கிறது. இப்படித்தான் தென்மேற்குப் பருவமழை உருவாகிறது.

இப்படி இந்தியப் பெருங்கடலில் உருவாகும் தென்மேற்குப் பருவமழை இரு பகுதிகளாகப் பிரிந்து, ஒன்று இந்தியாவின் மேற்குக் கடலோரப் பகுதிகளின் வழியாக அரபிக் கடலிலிருந்து கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்குள் நுழையும். மேற்குக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் இம்மழை மேகங்களைத் தடுத்து அம்மலைகளிலும் அதனை ஒட்டியிருக்கும் பகுதிகளிலும் பெரும் மழையாகப் பொழியச் செய்யும். இப்படி வருடத்தின் மூன்று மாதங்களில் பெய்யும் இம்மழைதான் காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, தாமிரபரணி போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி, சமவெளிகளில் வருடம் முழுவதும் பாய்ந்து வளம் கொழிக்கச் செய்யும் பல ஆறுகளின் அடிப்படை ஆதாரம்.

மற்றொரு பகுதி வங்கக் கடலின் வழியாக ஒடிசா, மேற்கு வங்கம், வட கிழக்கு மற்றும் வட மாநிலங்களுக்குள் நுழையும். வடக்கே சுவர் போல் உயர்ந்து நிற்கும் இமயமலைத் தொடர் இம்மழை மேகங்களைத் தடுத்து வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் மழையாகப் பொழியச் செய்கிறது. இப்பருவமழைதான் மத்திய இந்தியாவில் பாயும் நர்மதா, தபதி, மகாநதி மற்றம் வடக்கே பாயும் கங்கை, சிந்து, யமுனை போன்ற பல ஆறுகளுக்கு நீராதாரம்.

இந்த இயற்கை அமைப்பு மட்டும் இல்லையெனில் மொத்த இந்தியாவும் தார் பாலைவனம் போல் ஆகிவிடும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்தத் தென்மேற்குப் பருவமழை ஓர் இயற்கை அதிசயம்தான். பருவமழை என்பது வெறும் மழையல்ல, அது உயிர்களுக்கு வாழ்வளிக்கும் கடவுள்.

——————————————————————————————————————————-

References:

  1. https://en.wikipedia.org/wiki/Monsoon_of_South_Asia
  2. http://www.imd.gov.in/pages/monsoon_main.php
  3. https://en.wikipedia.org/wiki/Climate_of_India
  4. https://www.tripsavvy.com/monsoon-season-in-india-1539591
  5. https://www.businesstoday.in/top-story/all-eyes-on-a-monsoon-that-is-critical-for-india-economy/story/357288.html

    Leave a Reply

    Your email address will not be published.