பெண் வெறும் உடலல்ல, அவள் உணர்வுள்ள ஓர் உயிர் !

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண் விடுதலை குறித்து பாரதி, பின்னர் காந்தி, பெரியார் போன்றவர்கள் கண்ட கனவுகளும், கடந்த நூறு ஆண்டுகளில் பெண்களின் முன்னேற்றமும், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் பெண்களின் நிலையும்.

” பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களிலே யொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே.

கும்மியடி தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மைகண் டோமென்று கும்மியடி.

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போ மென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங் கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோமென்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடு வோம்தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.”

பெண் விடுதலை குறித்து மகாகவி சுப்ரமணிய பாரதி கண்ட கனவுகளாய் அவரது பாடல் வரிகளில் சில…

இன்று மார்ச் 8 , உலக மகளிர் தினம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று பெண் கல்வியிலும், சமுதாயத்திலும் ஆணுக்கு நிகராக உயர்ந்து நிற்கிறாள். பல நாடுகளின் தலைவர்களாக பெண்கள் இருக்கிறார்கள், உலகின் பல முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் பெண்கள் இருக்கிறார்கள், பல நிறுவனங்களில் ஆணுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் பணிபுரிகிறார்கள், விண்வெளிவரை செல்லும் நிலைக்கு வளர்ந்து விட்டார்கள், கை நிறைய சம்பாதிக்கிறார்கள், ஆண்களுக்கு நிகராக வீடு, கார் என்று வைத்திருக்கிறார்கள். இவ்வளவு தூரம் முன்னேறிவிட்டார்கள். பெண் விடுதலை, பெண் சுதந்திரம் எல்லாம் கிடைத்துவிட்டது. பெண்களும் ஆண்களுக்கு நிகராக தொழில்முறை பட்டப்படிப்புகளைப் (Professional Courses) படிக்கிறார்கள். இனி அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கப்போவதில்லை. ஒருவேளை இப்படி நீங்கள் நினைத்தால், உண்மையில் பெண்கள் போராடுவது எதற்காக, அவர்களுக்கு அப்படி என்னதான் வேண்டும் என்று உங்களுக்குப் புரியவில்லை இல்லையெனில் புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

நாம் மகளிர் தினத்திற்கு நம் தோழிகளுக்கும், உடன் பணிபுரிபவர்களுக்கும் வாழ்த்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கும் இதே சமயத்தில், இன்று மகளிர் தினம் என்பதைக் கூட அறியாது, தனக்கு விதிக்கப்பட்ட வேலைகளை, இதெல்லாம் பெண்களின் வேலைதான் என்று நம்பிக்கொண்டு, உலகின் மிகப்பெரிய ஒர்க் ஃபோர்ஸான (Work Force) பெண்கள், தங்களின் அன்றாடப் பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவையெல்லாம் பெண்கள் செய்யவேண்டிய வேலைகள்தான் என்று அவர்களையே நம்பவைத்துவிட்டதுதான் இந்த ஆணாதிக்கச் சமூகம் அவர்களுக்கு இழைத்த மிகப்பெரிய அநீதி. அத்தோடு நின்றுவிடவில்லை அவர்களுக்கு இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அநீதிகள். அந்தப் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே போகிறது. வயதிற்கு வந்த பெண் ஆண்களுடன் பேசக்கூடாது, மாதவிடாய் காலங்களில் அவர்கள் கோவிலுக்குச் செல்லக் கூடாது, வீட்டில் சாமியறைக்குச் செல்லக் கூடாது, அப்படியான நாட்களில் அவர்கள் தீட்டுப்பட்டவர்கள், எதையும் தொடக்கூடாது, இளம் பெண் எங்கிருந்தாலும் ஆறு மணிக்குள் வீடு திரும்பவேண்டும், கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது, ஜீன்ஸ் அணியக்கூடாது, லெகிங்ஸ் அணியக்கூடாது, தலைமுடியை அப்படியே விரித்துப்போடக்கூடாது என்ற இந்தப் பட்டியலுக்கு முடிவே கிடையாது. இத்தனை கட்டுப்பாடுகளும் இங்கு பெண்களுக்கு மட்டும்தான். இந்தக் கட்டுப்பாடுகள் ஏதும் ஆண்களுக்குப் பொருந்தாது. ஏன்? என்று கேட்டால் ” அவன் ஆம்பிள பையன், அவன் அப்படிதான் இருப்பான். பொம்பள புள்ள அடக்க ஒடுக்கமாத்தான் இருக்கணும் ” என்று பதில் வரும்.

இப்படிப்பட்ட சமூகப் பார்வைகளுக்கும், பெண் அடிமைத்தனத்திற்கும் எதிராகத்தான் தமிழகத்தில் “பகுத்தறிவுப் பகலவன்” என்றழைக்கப்படும் “பெரியார்” அவர்கள் தன் இறுதி மூச்சுவரைப் போராடினார். பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடிய உலகின் தலைசிறந்த தலைவர்களுள் பெரியார் முதன்மையானவர் என்றால் அது மிகையாகாது. சமூகத்தின் பிரிக்கமுடியாத அங்கமான திருமணம் எனும் அமைப்பு பெண்களை அடிமைப்படுத்தி, அவர்களைச் சுரண்டுகிறது என்றார் அவர். இப்படி அவர் சொல்லியதன் அடிமுதல் தேடிப்பார்த்தால் புரியும் அவர் சொன்னது மிகவும் நிதர்சனமான உண்மை என்று. ஆம் திருமணம் எனும் அமைப்பு பெண்களைச் சுரண்டும் ஒரு அமைப்பாகத் தான் இன்றுவரை இருந்துவருகிறது. வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில நடப்படும் ஒரு செடியைப் போல, ஒவ்வொரு பெண்ணும் திருமணத்திற்குப் பிறகு தன் பிறந்த வீட்டிலிருந்துப் பிரிக்கப்பட்டு, கணவன் வீடான புகுந்த வீட்டிற்கு முழுவதும் பெயர்த்து வைக்கப்படுகிறாள். இது சாதாரண ஒரு சமூக நிகழ்வு போலத்தான் தோன்றும். ஒரு பெண்ணாக இருந்துப் பார்த்தால்தான் இதன் வலியை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆண்களால் இதை உணரமுடியாது, ஏனெனில் அவர்களின் வாழ்வில் இப்படி ஒரு நிகழ்வே கிடையாது. உணரமுடியவில்லை என்றாலும்கூட இந்த விஷயத்தில் ஒரு பெண்ணின் வலியை, உணர்வுகளைப் புரிந்துகொள்ள குறைந்தது முயற்சியாவது செய்ய வேண்டும். இப்படியாக பெண்களைச் சுரண்ட ஆரம்பிக்கும் திருமண அமைப்பு, பத்து மாதங்கள் குழந்தையைச் சுமக்க வேண்டும், அதைப் பெற்றெடுக்க வேண்டும், அந்த வலி இங்கு யாருக்கும் புரியாது (கணவன் உட்பட), புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யமாட்டார்கள், குழந்தை பிறந்த பின் அவள் தான் முழுப்பொறுப்பு, அப்பா வெறும் பேருக்குத்தான். அவருக்கு இந்தக் குழந்தைப் பெறுவதிலோ, அதை வளர்ப்பதிலோ பெரிய பங்கு ஒன்றும் கிடையாது. அப்படியே ஏதாவது கேட்டால் ” அதெல்லாம் பொம்பளைங்களோட வேல” என்று நாகூசாமல் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். திருமணத்திற்குப் பின் குழந்தை, வீட்டு வேலைகள், சமையல், கணவனுக்குப் பணிவிடைகள், என்று மனைவியின் அன்றாட வாழ்க்கையில் தனக்கான தனிப்பட்ட நேரம், தனிப்பட்ட ஆசைகள், கனவுகள் எல்லாம் புதைந்து போய்விடும். ஆக மொத்தத்தில் திருமணம் ஒரு பெண்ணை மொத்தமாக உயிர்வரைச் சுரண்டும் ஓர் அமைப்பு. ஆனால் இதைவிடச் சிறந்த அமைப்பும் சமூகத்தில் இல்லை. தனக்கு வசதியாக, மற்ற பொறுப்புகள் அனைத்தையும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, ஆண் பணம் சம்பாதித்துக் கொடுக்கும் கருவியாக மட்டும் இருக்கும் இந்தச் சமூக அமைப்பு மொத்தமாக மாற வேண்டும். குடும்பம் எனும் அமைப்பை ஆண் பெண் இருவரும் சரிபாதியாகப் பகிர வேண்டுமேயன்றி, பெண் மீது ஏறி சவாரி செய்யும் ஒரு மாட்டு வண்டியாகத்தான் அந்த அமைப்பு இருந்துகொண்டிருக்கிறது. இந்த அமைப்பை நாம் தான் மாற்றியமைக்க வேண்டும். அதற்கான முழுப் பொறுப்பும் இந்தத் தலைமுறையினருக்கு இருக்கிறது.

திருமண அமைப்பையும் தாண்டி, இன்னும் பெண்களை அடக்கியாள இன்றைய நவநாகரீக உலகம் பயன்படுத்தும் மற்றுமொரு நூதன ஆயுதம் “அழகு”. தான் அழகாக இருக்கவேண்டுமென்பதில் தவறொன்றுமில்லைதான். ஆனால் பெண்களின் இந்த அடிப்படை உணர்வே அவர்களுக்கு எதிராகவும், அவர்களை ஆண்களின் கைப்பிடிக்குள்ளேயே வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பெண்களை அழகோடு தொடர்புபடுத்தியும் ஆண்களை வீரத்தோடு தொடர்புபடுத்தியும் பேசுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் நாம் சற்று ஆராய்ந்து அடிமுதல் தேடிப்பார்த்தால் புரியும், இது பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்ப்பதற்கான ஒரு யுத்தியென்று. நவநாகரீக உலகத்தின் இந்தச் செயல்பாடு, இந்தத் தலைமுறை ஆண்களும், அடுத்த தலைமுறை ஆண்களும், பெண்களை வெறும் உடலாக, ஆபாசப் பொருளாக, நுகர்வுப் பொருளாக மட்டுமே பார்க்கும் ஓர் ஆரோக்கியமற்ற மனநிலையையே உருவாக்கும். இப்படிப்பட்ட செயல்பாடுகள், பெண்களைச் சமூக அக்கறை இல்லாதவர்களாகவும், குழந்தை பெற்று வளர்க்கும் இயந்திரங்களாகவும், அழகுப் பதுமைகளாகவுமே முன்னிலைப்படுத்திக் காட்டிக்கொண்டிருக்கின்றன. ஆண்களின் உள்ளாடை விளம்பரங்களில் கூட பெண்களை உள்ளாடைகளுடன், அரை நிர்வாணமாகக் காட்டும் சமூகத்தைத்தான் நாம் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். இது பெண் சுதந்திரமல்ல, பெண் என்பவள் ஆணின் அடிமைதான், பெண் ஆணுக்கானவள்தான் என்னும் மனநிலையையே மக்களிடையே கொண்டு சேர்க்கும்.

பெண் என்பவள் அப்படி ஒன்றும் பெரிய மேன்மை பொருந்தியவளெல்லாம் இல்லை. பெண் போற்றுதலுக்குரியவளும் இல்லை. அவள் ஒன்றும் அந்த துர்கையின், மஹாலக்‌ஷ்மியின், சரஸ்வதியின், பராசக்தியின் அவதாரமெல்லாம் கிடையாது. அவளுக்கு பத்து கைகள் எல்லாம் கிடையாது. அவளும் நம்மைப் போலவே மிகவும் சாதாரணமானவள்தான். ஒரு ஆணைப்போலவே அவளுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. ஆணைப்போலவே அவளுக்கும் ஆசைகளும், கனவுகளும் இருக்கும்.

” என்று இந்த தேசத்தில் ஒரு பெண் இரவில் தனியாக, எந்தப் பயமுமின்றி வெளியில் சுதந்திரமாக நடமாட முடிகிறதோ அன்று தான் இந்தியாவுக்கு உண்மையான விடுதலை ” என்றார் மகாத்மா காந்தி.

அது போல என்று ஒரு பெண் வெறும் உடலாகப் பார்க்கப்படாமல், அவளும் ஆணைப்போலவே இரத்தமும், சதையும், எல்லா உணர்வுகளும் உள்ள ஒரு சக உயிராகப் பார்க்கப்படுகிறாளோ அன்று சொல்லிக்கொள்ளலாம் சமூக அமைப்பில் இந்தியா சிறந்த நாடென்று.

    One thought on “பெண் வெறும் உடலல்ல, அவள் உணர்வுள்ள ஓர் உயிர் !”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *